மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 8237 கன அடியாக சரிந்தது.
கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கர்நாடகா மாநிலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அங்குள்ள கேஆர்எஸ், கபினி ஆகிய இரு முக்கிய அணைகளும் நிரம்பின. அவற்றிலிருந்து வெளியேறும் உபரி நீர் முழுவதும் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைகிறது. அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது.
இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி மேட்டூர் அணை 100 அடியை எட்டியது. அதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகும் தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக இருந்ததால், செப். 7ம் தேதியன்று அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன்பிறகு பெரிய அளவில் மழை இல்லாததாலும், பாசனத்திற்கு தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருவதாலும், மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், இன்று (அக். 15, 2019) காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 8237 கன அடியாக இருந்தது. அணையில் நீர் இருப்பு 93.5 டிஎம்சி ஆக இருந்தது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதமும், மேற்குக் கால்வாய் வழியாக வினாடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 113.75 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் (அக். 13) நீர்மட்டம் 115.10 அடியாக இருந்த நிலையில் இரண்டே நாளில் 1.15 அடி நீர்மட்டம் குறைந்துள்ளது.