புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் போன்ற பகுதிகளில் வழக்கம்போல நெல், வாழை, கடலை, மிளகாய், சோளம் மலர் விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மாற்று பயிர் விவசாயம் செய்ய முடிவெடுத்த விவசாயிகள் மா, பலா, தேக்கு போன்ற மரப்பயிர்களுக்கு மாறினார்கள். அதிலும் வடகாடு, மாங்காடு, பட்டிபுஞ்சை, சேந்தன்குடி ஆகிய கிராமங்களில் தென்னை, தேக்கு, மா, பலா, வேம்பு என்று தோட்டங்களில் நிற்கும் மரங்களில் ஊடுபயிர் செய்ய திட்டமிட்டனர்.
ஆதனால் அருகில் மிளகு கொடியை நட்டு வளர்த்து மரங்களில் படரவிட்டு சமவெளியிலும் மிளகு சாகுபடி செய்யலாம் என்பதை செய்து காட்டினார்கள். அதாவது குளிர்ந்த மலை பகுதியில் மட்டுமே செய்யப்பட்டு வந்த மிளகு சாகுபடி அனைத்து விளைநிலங்களிலும் வளர்ந்து நல்ல பலன் கொடுக்கும் என்பதை சில விவசாயிகள் சாகுபடி மூலம் அறிந்ததால் பல விவசாயிகள் மிளகு சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர்.
காரம் அதிகமாகவும் உயர்தரமான மிளகு வடகாடு, பட்டிபுஞ்சை, அணவயல், சேந்தன்குடி பகுதியில் உற்பத்தில செய்யப்படுவதை அறிந்த மசாலா நிறுவனங்கள் நேரடியாக வந்து விவசாயிகளிடமே கொள்முதல் செய்து செல்கின்றனர்.
இதேபோல அனைத்து பகுதியிலும் மிளகு விவசாயம் செய்யலாம் என்பதை தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தெரியப்படுத்தும் விதமாக கடந்த 3 ஆண்டுகளாக ஆர்வமுள்ள விவசாயிகளை அழைத்து மிளகு தோட்டங்களிலேயே வைத்து விவசாயிகளே பயிற்சியும், செயல்முறையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று வடகாடு ஆசிரியரும் விவசாயியுமான பாக்கியராஜ் தோட்டத்தில் பயிற்சி முகாம் நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆர்வமுள்ள சுமார் 250 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவை வோளாண்மை கல்லூரியின் முன்னாள் முதல்வர் வைரவன், புதுக்கோட்டை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் குமார் ஆகியோர் கலந்துகொண்டு பயிரிடும் முறைகள் மற்றும் பராமரிப்புகள் பற்றி விளக்கினார்கள். தொடர்ந்து முன்னோடி மிளகு விவசாயிகள் பால்சாமி, ராஜாக்கண்ணு, செந்தமிழ்செல்வன், மரம் தங்க கண்ணன் ஆகியோர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து தோட்டத்தில் மரங்களில் படர்ந்து காய்த்துள்ள மிளகு கொடிகளை விவசாயிகளுக்கு காட்டி செயல்விளக்கத்தை பாக்கியராஜ் வழங்கினார்.
பயிற்சியில் கலந்து கொண்ட பலரும் தங்கள் தோட்டங்களில் மிளகு சாகுபடி செய்வோம் என்று மிளகு பண்ணையில் கன்றுகள் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் பயிற்சி பெற்ற பல விவசாயிகள் மிளகு சாகுபடி செய்து வருவதாக கூறினார்கள். விவசாயிகளுக்கு அனுபவமிக்க விவசாயிகளே பயிற்சி கொடுத்தது சிறப்பாக இருந்ததாக பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் கூறினார்கள்.