ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமம் நஞ்சைகோபி. இங்கு கிராம நிர்வாக அதிகாரியாக லலிதா என்பவர் பணிபுரிகிறார். இன்று காலை லலிதா தனது அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது அதே கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற விவசாயி மெல்ல தள்ளாடியபடி அலுவலகத்திற்கு சென்றார்.
பிறகு விஏஓவிடம் எப்பம்மா புளியங்காய் ஏலம் விடுவீங்க எனக்கேட்க விஏஓ லலிதா விடுவோம், ஏலம் விடுவதற்கு முன்னால் முறைப்படி தண்டோரா போடுவோம் எனக் கூறியிருக்கிறார். அந்தப் பதிலை ஏற்காத போதை ஆசாமியான மூர்த்தி நீ ஏலம் விடும் வரைக்கும் அந்த மரத்தில் புளியங்காய் காத்துகிட்டு இருக்குமா? இப்பவே பாதி புளியங்காய் கீழே விழுந்து வீணா போகுது ஒழுங்கா சொல்லு எப்போ ஏலம் விடுவே..? என கேட்க வி.ஏ.ஓ. லலிதா நான் மேல் அதிகாரிகளிடம் கேட்டு விடுகிறேன் என பதில் கூறியிருக்கிறார்.
ஆனாலும் விடாத போதை ஆசாமி இப்ப ஏலம் விடு இல்லைனா நடக்குறதே வேற என மிரட்ட தொடங்கியிருக்கிறார். பயந்துபோன வி.ஏ.ஓ. முதலில் வெளியில போங்க எனக்கூற என்னையே வெளியில போக சொல்றியா என அவரது டேபிளில் இருந்த சில ஆவணங்களை கிழித்துப் போட்டுவிட்டு வெளியே வந்து நான் யார் தெரியுமா அமைச்சர் செங்கோட்டையனுடைய சொந்தக்காரன் புரிஞ்சுக்கோ என கடுமையாக மிரட்டியதோடு நீ ஏலம் விட்டா என்ன விடாட்டி என்ன அந்த புளியங்காய் எனக்குத் தான் என கூறியிருக்கிறார்.
அருகே இருந்த சிலர் வீணா பிரச்சனை செய்யாதீங்க, நீங்க போங்க எனக்கூற அவர்களையும் மிரட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் பயந்துபோன வி.ஏ.ஓ லலிதா காவல் நிலையம் போய் புகார் கொடுத்தார். காவலர்கள் வந்து விசாரணை செய்தபோது அந்த மூர்த்தி புளியங்காய் ஏலம் எடுப்பதற்காக அந்த வி.ஏ.ஓ.வை மிரட்டியது தெரிய வந்துள்ளது. இப்போது மிரட்டிய மூர்த்தி எஸ்கேப் ஆகிவிட்டார்.
போதை ஆசாமி கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து பெண் வி.ஏ.ஓ.வை மிரட்டிய சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.