Skip to main content

லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து; டிரைவர் உள்பட 2 பேர் பலி

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

erode district perundurai omni bus lorry incident

 

சென்னையில் இருந்து நேற்று இரவு பொள்ளாச்சி நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்தை காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 55) என்பவர் ஓட்டி வந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோஸ்வா (வயது 21) என்பவர் பஸ் கண்டக்டராக இருந்துள்ளார். இந்த தனியார் ஆம்னி பஸ் இன்று காலை 5:45 மணி அளவில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை பகுதியில் உள்ள தனியார் மண்டபம் எதிரில் உள்ள மேம்பாலம் முன்பு சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

 

இந்த திடீர் விபத்தால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் விபத்தில் சிக்கி அலறியுள்ளனர். இந்த விபத்தில் பஸ் டிரைவர் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பஸ்சில் பயணம் செய்த நடத்துனர் ஜோஸ்வா (வயது 21), திருப்பூர் மாவட்டம் பல்லடம் லட்சுமி நகரை சேர்ந்த ஜான் நேசன் (வயது 28), அவரது மனைவி ஜெனி (வயது 26), உடுமலையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா (வயது 23), கூடலூரைச் சேர்ந்த டேவிட் ராஜ் (வயது 50), ஜான்சி மேரி (வயது 30), குருசம்மா (வயது 46), உமேஷ் (வயது 12), சென்னை சோலையூரைச் சேர்ந்த பூங்கொடி (வயது 45), திருப்பூரைச் சேர்ந்த ஆதர்ஷ் (வயது 26), ராமாயி (வயது 65), மனோஜ் (வயது 27) ஆகியோர் காயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

இதையடுத்து பெருந்துறை போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாலமுருகன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மிகவும் கவலைக்கிடமாக இருந்த திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த ஜான் நேசன் (வயது 28) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் ஜான் நேசன் மனைவி லேசான காயத்துடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்