ஈரோட்டில் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. நாளையுடன் தேர்தல் பரப்புரை முடிய இருக்கிறது. இந்த தேர்தலில் திமுகவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. திமுக வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு பகுதியில் பல்வேறு இடங்களில் மாலைநேர பிரச்சார பொதுக் கூட்டத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள தேவாலயத்தின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கட்சி நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அங்கு வந்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் 3 பேர் சீமானை பாஜக போன்று சித்தரித்து வடிவமைத்து துண்டு பிரசுரங்களை வழங்கி திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சியினர், 'திமுகவின் கொள்கைகளை கூறி வாக்கு கேட்காமல் தனிப்பட்ட ஒருவரை சித்தரித்து ஏன் துண்டு பிரசுரங்களை வழங்குகிறீர்கள்?' என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அங்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர். இருப்பினும் வாக்குவாதம் முற்றியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.