சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் நேற்று வழக்கறிஞர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த மீனாம்பாள் தெருவில் தியாகராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞர் ஆவார். நேற்று வழக்கம்போல் வழக்கறிஞர் தனது மனைவி, மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது திடீரென வீட்டுக்குள் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அப்போது ஜன்னல் வழியாக வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் அந்த பகுதியில் இருந்து ஓடிச் சென்றது தெரிந்தது.
வீட்டிற்குள் துப்பாக்கி குண்டு ஒன்று விழுந்து கிடந்தது. அந்த குண்டை பார்த்து அவர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றிருக்கலாம் என அச்சமடைந்து உடனடியாக தாம்பரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், வீட்டுக்குள் ஜன்னலை துளைத்து உள்ளே வந்த துப்பாக்கி குண்டை கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆய்வில் அது எஸ்.எல்.ஆர் சிறிய ரக துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு எனத் தெரியவந்தது.
போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அருகிலேயே ஒரு துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம் இருப்பதாகவும் அங்கிருந்து தோட்டாக்கள் பறந்து வந்திருக்கலாம் என்ற கோணத்தில் இப்பொழுது விசாரணையை போலீசார் மாற்றி உள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள இடங்களை ஆய்வு செய்ததில் ஏழு இடங்களில் இதேபோல சிறிய துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அண்மையில் விமானப்படை பயிற்சிக்காக வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நார்த்தாமலை பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் இருந்து பாய்ந்த குண்டு, வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனின் மூளையை துளைத்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.