திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் மற்றும் ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மாணவர்கள் தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளி படிப்பை மட்டும் முடித்துவிட்டு உயர்கல்வி கற்க முடியாத நிலையுடன் இருந்து வந்தனர். மேலும் உயர்கல்வி கற்க வேண்டுமென்றால் அருகில் உள்ள திண்டுக்கல் மற்றும் மதுரைக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்து வந்தனர்.
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ஆத்தூர் தொகுதி மாணவர்களின் நலன் கருதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரி கொண்டுவந்தார். அதன்பின்னர் அதிமுக ஆட்சியின் போது ஆத்தூர் தொகுதி புறக்கனிக்கப்பட்டது. மீண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆத்தூர் ஒன்றியத்தில் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவந்ததோடு கூட்டுறவுத்துறை சார்பாக 99கோடி மதிப்பில் புதிய கல்லூரியும் கட்ட ஏற்பாடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
ரெட்டியார்சத்திரம் பகுதி மாணவர்களின் நலன் கருதி கன்னிவாடி பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வந்ததால் கடந்த 3வருடங்களாக மாணவர்கள் எவ்வித சிரமமின்றி உயர்கல்வி கற்று வருகின்றனர். தற்போது ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவியர்கள் படித்து வருவது குறிப்பிடதக்கது. ஆத்தூர் தொகுதியில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள் கல்லூரி கட்டணம் கட்ட சிரமப்படுவார்கள் என்பதை உணர்ந்த அமைச்சர் ஐ.பெரியசாமி ஆத்தூரில் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கிய நாள் முதல் இன்றுவரை கல்லூரியை சேர்ந்து படிக்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் கல்லூரி கட்டணத்தில் தொடங்கி பருவ கட்டணம் வரை அனைத்து கட்டணங்களையும் செலுத்தி வருகிறார். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு கிராமப்புற மாணவர்களும் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர் கல்லூரியில் 2022-23ம் கல்வியாண்டில் 220 மாணவர்கள் சேர்ந்தனர். அதன்பின்னர் 2023-24ம் கல்வியாண்டில் 266 மாணவர்கள் சேர்ந்தனர் அதன்பின்னர் தமிழ்நாட்டிலேயே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இல்லாத அளவிற்கு 2024-25ம் கல்வியாண்டில் 644 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவ்வருடம் மொத்தம் 1144 மாணவ மாணவியர்கள் படித்து வரும் நிலையில் இவர்களில் கிராமப்புறத்தை சேர்ந்த 423 மாணவியர்கள் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடதக்கது. 2024-25 கல்வியாண்டிற்கான வகுப்புகளை துவக்க வந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கைகூப்பி நன்றி தெரிவித்ததோடு ஒருசில பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
அப்போது கிராமப்புறத்தை சேர்ந்த பெற்றோர்கள் எங்கள் வீட்டு பிள்ளைகளின் படிப்பு பள்ளிப்படிப்போடு நின்றுவிடும் என்று நாங்கள் கலங்கிய நிலையில் அவர்களின் கல்வி வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் நான் இருக்கிறேன் கவலைப்படாதீர்கள் என்று கூறி எங்கள் பிள்ளைகளுக்கு இன்றுவரை கட்டணம் செலுத்தி படிக்க வைத்து வருவதற்கு நாங்கள் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம் என்று கூறியதோடு அமைச்சரின் கையை பிடித்து தங்களுடைய நன்றியை தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “அறிஞர் அண்ணா காலம் தொடங்கி முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை கிராமப்புற மாணவர்களின் கல்வியை காப்பாற்றி வருகின்றனர். அவர்களின் வழியில் என்னால் முடிந்த சிறுஉதவியை கல்லூரி மாணவர்களுக்காக செய்து வருகிறேன். கல்வி ஒன்றுதான் அவர்களிடமிருந்து பிரிக்க முடியாத சொத்தாக உள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு பல கிராமப்புற மாணவர்கள் தேசியஅளவில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்துள்ளார்கள். மேலும் சாதனை படைத்த மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. மாணவர்களின் பொற்காலம் என்றால் அது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியே” என்றார். அமைச்சர் ஐ.பெரியசாமி விழா முடிந்து கல்லூரியை விட்டு வெளியே வரும்போது மாணவர்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக கைதட்டி தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்தனர்.