Skip to main content

தினசரி மார்க்கெட்டாக மாறும் ஈரோடு பஸ் நிலையம்

Published on 27/03/2020 | Edited on 27/03/2020

 

b


கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மக்கள் கூடும் இடங்களை நெரிசலற்ற பகுதியாக மாற்றும் நடவடிக்கை தமிழகம் முழுக்க நடந்து வருகிறது. 

 

ஈரோட்டில் செயல்படும் நேதாஜி தினசரி மார்க்கெட் மிகவும் பிரபலமானது.  ஈரோடு நகர் மட்டுமில்லாமல் சுற்றுப்புறத்திலுள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் இந்த மார்க்கெட்டுக்கு வந்து மொத்தமாகவும் சில்லரையாகவும் காய்கறிகளை ஏராளமானபேர் வாங்கி செல்வார்கள். மேலும் சில்லரை வியாபாரிகள் இங்கு பொருட்களை வாங்கி கடைகளில் கொண்டுபோய் விற்பார்கள்.  

 

b

 

நாளொன்றுக்கு சுமார் 50,000 பேர் வரை இந்த மார்க்கெட்டை பயன்படுத்திவந்தனர்.  அதேபோல் தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூர், ஊட்டி, கொடைக்கானல் என பல ஊர்களிலிருந்தும் காய்கறிகள் வரத்து ஒவ்வொரு நாளும் இருக்கும்.  இரவிலிருந்து காலை பத்து வரை மக்கள் கூட்டம் அலைமோதும் இந்த மார்க்கெட் பகுதியை விரிவுபடுத்த முடியாத சூழல்.  எனவே ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டு மார்க்கெட் முழுமையாகவே ஈரோடு பஸ் நிலையத்திற்குள் கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

 

இதனடிப்படையில் இப்போது பேருந்துகள் இல்லாமல் காலியாக இருக்கும் ஈரோடு பேருந்து நிலையத்தை அப்படியே மார்க்கெட் ஆக மாற்றி ஏற்கனவே நேதாஜி மார்க்கெட்டில் வியாபாரம் செய்துவரும் வியாபாரிகளை பஸ் நிலைய பகுதியை பிரித்து வியாபாரம் செய்து கொள்ள அறிவுறுத்தினார்கள். நாளை முதல் ஈரோடு பஸ் நிலையம் ஈரோட்டில் மார்க்கெட்டாக செயல்பட உள்ளது.  இரவு முதல் காலை 9 மணி வரை இங்கு வியாபாரம் நடக்கும்.  பொருள்கள் வாங்கும் மக்கள் வியாபாரிகள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்