ஒரு அமைச்சரா இருந்தா வூட்டுல சும்மா உக்காந்துகிட்டு இருக்க முடியுமா? நாலு எடத்துக்குப் போகனும், பத்து விசுவாசிகள் கூட இருக்கனும், போலீஸ் சல்யூட் வாங்கனும்... அப்படித்தான் எங்க மினிஸ்டர் கருப்பணனுங்க..., எனக் கூறும் ர.ர.க்கள் "இவரு ஏற்கனவே தி.மு.க. சேர்மேன் ஜெயிச்ச ஊருக்கு அரசு குறைவான நிதியைத் தான் ஒதுக்குவோமுனு சொல்லி வாய கொடுத்து வம்புல மாட்டுனாரு, அப்புறம் முதல்வர் எடப்பாடி நேரில் வரவழைத்து கருப்பணன் வாய்க்குப் பூட்டு போட்டது போல நீங்க எந்த ஆணியையும் பிடுங்க வேண்டாம் எனக் கூறி ஒரு நிகழ்ச்சியிலேயும் கலந்துக்க வேண்டாம் உங்க வூட்டோட இருங்க எனக் கோபமாகப் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தார்.
ஊருக்கு வந்த அமைச்சர் கருப்பணன் சீனியர் அமைச்சர் செங்கோட்டையனிடம், அண்ணா நானும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசாமல் இருக்கிறேன் எனச் சொல்ல, சில நாட்கள் கழித்து நிகழ்ச்சிகளில் தலை காட்டத் தொடங்கினார். அதன்பிறகு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியோ, பொது வெளியில் எதுவும் பேசாமல் வாயைக் கட்டிக்கொண்டுதான் வருகிறார் அமைச்சர் கருப்பணன்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து பகுதிகளிலும் நடந்து வரும் நிலையில் ஒரு அமைச்சராகத் தானும் பணியில் தான் இருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்ள வியாழக்கிழமை அவரது சொந்த ஊரான பவானியில் உள்ள அம்மா உணவகத்திற்குத் தனது விசுவாசிகள் சிலரோடு வந்தார்.
அங்குச் சமைக்கப்படும் உணவு தரம் வாய்ந்ததா என்பதைப் பரிசோதனை செய்கிறேன் எனக் கூறிவிட்டு ஒரு தட்டு கொண்டு வரச் சொல்லி உணவைச் சாப்பிடுவது போல் போட்டோ எடுக்கச் சொன்னார். அங்கிருந்த புகைப்படக் கலைஞரும் அதுபோல போட்டோ எடுத்தார். அவர் அருகே ஒரு சிறுவன் உண்மையாகவே உணவை சாப்பிட்டான். ஆனால் அமைச்சர் கருப்பணனோ தட்டில் உள்ள வெறும் இலையில் கை வைத்து பிறகு தனது வாயில் உணவை ருசிப்பது போல் போட்டோ எடுக்க வைத்தார். இதைப்பார்த்த சுற்றிலும் இருந்தவர்கள் வெளிப்படையாக சிரிக்க முடியாமல் மனதுக்குள் சிரித்துக் கொண்டனர் என்றனர். இதைத்தான் நாம் தொடக்கத்தில் கூறியதுபோல் பவானி அதிமுகவினர் அப்படிக் கூறினார்கள்.