தமிழர் திருநாளாம் பொங்கல் விழா 15-ந் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து மாட்டு பொங்கல், காணும் பொங்கல் எனத் தொடர் விடுமுறைகள் வர உள்ளது.
அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பரிசுத்தொகை ரூ.1000 என வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடும் வகையில் இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றது.
13ம் தேதி முதல் 17ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உட்பட அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பொங்கல் வைத்தும், விளையாட்டு போட்டிகளை நடத்தியும் கொண்டாடினர்.
இதேபோல கல்லூரிகளில் தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி, சட்டை அணிந்தும், மாணவிகள் சேலை, தாவணி அணிந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். உறி அடிக்கும் போட்டிகள், நடன போட்டிகள் என நடத்தப்பட்டு உற்சாகமாக கொண்டாடினர். பொங்கல் விடுமுறைக்காக இன்று மாலையிலிருந்து மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்குவார்கள். இதனால், ஈரோடு பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறாத வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முக்கிய கடைவீதிகளில் மக்கள் ஜவுளி வாங்க கூட தொடங்குவார்கள். இதனை முன்னிட்டு மக்கள் கூடும் இடங்களிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.