Skip to main content

சட்டமன்றத்தில் முதல்வரின் பதில்... இபிஎஸ், ஓபிஎஸ் சாலையில் அமர்ந்து தர்ணா!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதற்கடுத்த நாளே வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வரும் செப். 21 தேதிவரை சட்டபேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ராஜ்ய சபா தேர்தல் காரணமாக செப். 13ஆம் தேதிவரை பேரவையை நடத்த சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் நேற்று (17.08.2021) முடிவெடுக்கப்பட்டது.

 

இந்நிலையில், இன்று பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரமில்லா நேரத்தில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாட்டில் நடந்த கொள்ளை, கொலை தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கை மீண்டும் தற்போதுள்ள அரசு கையிலெடுத்துள்ளது'' என்று பேசினார். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். கொடநாடு கொள்ளை, கொலை தொடர்பாக முதல்வர் பேசுகையில், ''கொடநாடு கொலை வழக்கில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல நீங்களே அந்தப் பிரச்சனையைக் கிளப்புகிறீர்கள். அந்த மாதிரிதான் அதிமுகவினரின் போக்கு உள்ளது'' என்று கூறினார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். வரும்போதே கருப்பு பேட்ஜ் அணிந்துவந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

 

அதனையடுத்து வெளியே வந்த அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கின் முகப்பில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர். அதிமுவுடன் பாமக, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். 'பொய் வழக்கு போடாதே' என்ற கோஷங்களை முன்வைத்து அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டுவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்