Published on 23/06/2018 | Edited on 23/06/2018
எட்டு வழிச்சாலைத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் அறிவிக்கப்படாத போரை தொடுத்திருக்கிறது என்று முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
விவசாயத்தை நாசமாக்கும் எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்து திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஆர்.பார்த்திபன் 'நக்கீரன்' இணைய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,
தமிழக அரசு, எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக காவல்துறையினர் மூலம் விவசாயிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களின் நிலங்களை கையகப்படுத்துகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்டனர். ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் இந்தியாவுக்குள் நுழைந்து இந்தியர்களை சுட்டுக்கொன்று குவித்து நம் வளங்களை கொள்ளை அடித்தனர் என்பதை வரலாற்றில் படித்திருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நிர்வாகம், விவசாயிகளை துப்பாக்கி முனையில் கொடுமைப்படுத்தி சொத்துகளை, நிலங்களை கொள்ளை அடிப்பதைப் பார்க்கும்போது கிழக்கிந்திய கம்பெனியின் செயல்தான் நினைவுக்கு வருகிறது.
இதே அதிமுக ஆட்சியில்தான் நில அபகரிப்பு செய்வோருக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போது அதிமுக அரசாங்கமே எட்டு வழிச்சாலைத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கிறது. சேலம் மாவட்டத்தில் இன்று எங்கு பார்த்தாலும் விவசாயிகள் கண்ணீரும் கம்பலையுமாக இருப்பதைக் காணும்போது வேதனையாக இருக்கிறது.
நமக்கு சோறு போட்டவன் விவசாயி. வாக்குச்சாவடிக்கு காலையில் நேரமாக வந்து முதல் ஓட்டு போட்டவனும் விவசாயிதான். சாலை அமைப்பதை விவசாயிகள் எதிர்க்கவில்லை. அதற்குமுன் அவர்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும். ஆனால், காட்டுமிராண்டித்தனமாக மிகப்பெரிய போலீஸ் படையை துப்பாக்கிகளோடு 'திபுதிபு' என்று வயல்வெளிகளில் இறங்கி செல்வதை பார்க்கும்போது விவசாயிகள் மிரண்டுபோய் கிடக்கின்றனர்.
விவசாயிகள் போடும் பிச்சையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஆட்சியாளர்கள் மறந்து விடக்கூடாது. அவன் சேற்றில் கால் வைக்காவிட்டால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது. அப்படிப்பட்ட விவசாயிகள் இன்றைக்கு நிர்வாணமாக்கப்பட்டு, சிறையில் தள்ளப்படும் கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது.
எட்டு வழிச்சாலை போட பல வழித்தடங்கள் இருக்கு. அதையெல்லாம் விட்டுவிட்டு அசுரத்தனமாக, மூர்க்கனத்தனமாக விவசாயிகள் மீது அறிவிக்கப்படாத மிகப்பெரிய போரை தமிழக அரசாங்கம் தொடுத்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமோ அல்லது பாகிஸ்தானில் இருக்கிறோமோ என்ற சந்தேகம் வருகிறது.
இந்த திட்டத்தால் என் குவாரியும் பறிபோகிறது. இரண்டு ஏக்கர் விவசாய நிலமும் பறிபோகிறது. இதனால் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் எனக்கு நஷ்டம் ஏற்படும். எங்களுக்கும் வயதாகி விட்டது. இதற்குமேல் நாங்கள் எங்கே போய் இதுபோன்ற நிலங்களை வாங்க முடியும்? இதற்கெல்லாம் ஒரே தீர்வு... எப்படா தேர்தல் வரும் என்று பார்த்துக்கிட்டு இருக்கோம். தேர்தல் வந்தால்தான் எல்லா விவசாயிகளும், மக்களும் சேர்ந்து இந்த அரசுக்கு சரியான பாடத்தை கற்றுக்கொடுப்போம். இவ்வாறு எஸ்.ஆர்.பார்த்திபன் கூறினார்.