சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (14/06/2022) காலை 11.00 மணிக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் செல்போன் கொண்டு வரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி கூட்டத்துக்கு செல்போனுடன் வந்ததால், திரும்பிச் சென்றார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன்.
மேலும், வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள கூட்டத்திற்காக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்குப் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தர அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிறப்பு அழைப்பாளர்களுக்குச் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்தில் வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், செயற்குழு கூட்டம் குறித்தும், குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் கூறுகின்றன.