புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், நெடுவாசலில் உள்ள நாடியம்மன் கோவில் வளாகத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பேவர் பிளாக் அமைக்கும் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அதன்பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், "ஒலிம்பியாட் செஸ் உலகப் போட்டிக்கான பணிகள் தமிழக முதலமைச்சர் ஆலோசனைப்படி மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. அங்குள்ள சுற்றுலா மாளிகையில் முன்பதிவிற்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதுவரை 145 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். சுமார் 180 முதல்190 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியைக் காண அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
அதேபோல, பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதைத் தடுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் கார்பன் வெளிப்பாட்டை 40 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கார்பன் வெளிப்பாடுகளைத் தடுக்க வனங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதற்காகத் தான் குறுங்காடுகளை அதிகமாக அமைத்து வருகிறோம்" என்றார்.