மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று உரையாற்றினார்.
அவரது உரையாவது, ''ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக மகளிரை நியமித்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். நாட்டிலேயே முதல்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கலைஞர் வழங்கினார். ஏழைப் பெண்களுக்கு இலவச இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு வழங்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சமூக பெண்களுக்கு முதலில் பள்ளிக் கல்வியும் அதன் பிறகு கல்லூரி வரை இலவச கல்வியும் வழங்கியதும் கலைஞர் தான். டாக்டர் முத்துலட்சுமி நினைவு மகப்பேறு திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் கைம்பெண் மறுமணத் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம், ஈவேரா மணியம்மையார் நினைவு ஏழை கைம்பெண்களின் மகன்களுக்கான திருமண உதவித் திட்டம் என எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்த அரசு கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டங்களில் எல்லாம் மகளிர் நலனையும் அவர்களின் மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு செயல்படுத்திக் காட்டிய கலைஞரின் அளப்பரிய பணிகளை நினைவு கூறும் வகையிலும், அவரது நூற்றாண்டு விழாவிற்கும் மேலும் மேலும் பெருமை சேர்க்கும் விதத்திலும் இந்த மகத்தான மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதி நமது அரசு இந்த திட்டத்திற்கு அறிஞர் கலைஞர் பெயரை சூட்டி மகிழ்ந்திருக்கிறது என்பதை நான் இந்த நேரத்தில் அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாகத் திகழும் இந்த திட்டத்தின் மூலம் நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர்; வயல்வெளிகளில் வேளாண்மைப் பணிகளில் ஈடுபடும் தாய்மார்கள்; அதிகாலையில் கடற்கரையை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர்; கட்டுமான தொழிலில் ஈடுபடும் மகளிர்; சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்திற்குச் செல்லும் மகளிர்; ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் விளிம்பு நிலையில் வாழும் பெண்கள் எனப் பல்வேறு வகையில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற உள்ளார்கள். திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதற்காக 2023-2024 ஆம் ஆண்டு வரவு செலவு அறிக்கையில் 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களைக் கொடுக்க நியாய விலைக் கடைகளில் சிறப்பு முகாம் நடத்தி வழங்க வேண்டும். குடும்ப அட்டை, ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் அதைப் பெற்றுத் தந்து உரிமைத் தொகை கிடைக்க உதவ வேண்டும். மகளிர் உரிமைத் தொகைக்கு சுமார் ஒன்றரை கோடி பேர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை எவ்வித புகாருக்கும் உள்ளாகாமல் செயல்படுத்திக் காட்ட வேண்டும்'' என்றார்.