எனது கதையைத் திருடி இயக்குநர் ஷங்கர், ‘எந்திரன்’ திரைப்படத்தை எடுத்ததாக, அவர் மீது நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த கிரிமினல் வழக்கு, இப்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.
“என் கதையைத் திருடி ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்களை வைத்து`எந்திரன்' திரைப்படத்தை எடுத்து, இயக்குநர் சங்கர் மோசடி செய்திருக்கிறார். இது காப்புரிமைச் சட்டப்படி கிரிமினல் குற்றம்'' என்று 2011-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் மீது ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும், ‘நாங்கள் கதையைத் திருடவில்லை. இந்த வழக்கு செல்லாது என்று உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இந்த சிவில் வழக்கில், 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, “ஜூகிபா' கதைக்கும் `எந்திரன்' சினிமாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இதன் மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாகத் தெரிகிறது என்பதால், எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட சங்கருக்கு எதிரான வழக்கைக் காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம்” என்று அழுத்தமாகவே தெரிவித்திருந்தார்.
மேலும், அந்தத் தீர்ப்பில், `ஜூகிபா' கதைக்கும் `எந்திரன்' படத்துக்குமான 16 ஒற்றுமைகளைப் பட்டியலிட்டுக் காட்டியிருந்தார் நீதிபதி. இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார் இயக்குநர் ஷங்கர். இந்த வழக்கில், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை' என்று சொல்லி இயக்குநர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவை 2020 அக்டோபரில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் பின்னர் இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம், தள்ளுபடி செய்ய, இதில் தமிழ்நாடன் தரப்பு மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் மீது சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட எந்திரன் கதைத் திருட்டு வழக்கு விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த வழக்கு 28 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் ஆரூர் தமிழ்நாடனை, விசாரணை செய்ய வேண்டிய இயக்குநர் ஷங்கரின் வழக்கறிஞர் சாய்குமார், மேலும் வாய்தா கேட்டு, வழக்கை ஒத்திவைப்பதிலேயே குறியாக இருந்தார். இதற்கு தமிழ்நாடனின் வழக்கறிஞர் வயிரவ சுப்பிரமணியன் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடனிடம் விசாரணையை அன்றே நடத்தி முடிக்கும் படி நீதிபதி உத்தரவிட, இதைத் தொடர்ந்து ஆரூர் தமிழ்நாடனிடம் இரண்டுமணி நேரத்திற்கு மேல் கேள்வி கேட்டு பதில்களைப் பெற்றார் சாய்குமார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு வரும் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அடுத்து, இயக்குநர் ஷங்கரை நீதிமன்றத்திற்கு அழைத்து, விசாரணை நடத்த ஆரூர் தமிழ்நாடன் தரப்பு தயாராகி வருகிறது.