![enthiran film actor refuses to give houses to Edappadi palanisamy supporters](http://image.nakkheeran.in/cdn/farfuture/8ITi6PL5o4g1yugShtfG6zUpPwhpGRThT35tzOCh1AE/1672392312/sites/default/files/inline-images/996_152.jpg)
‘எடப்பாடி அதிமுகவினருக்கும் வட மாநிலத்தவர்களுக்கும் வாடகைக்கு வீடு கொடுக்க மாட்டேன்’ என துணை நடிகர் ஒருவர் போட்ட கண்டிஷன் போர்டால் சீவலப்பேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைக்கு அருகே உள்ள சீவலப்பேரியைச் சேர்ந்தவர் ஐசக் பாண்டியன். துணை நடிகரான இவர் மாரி, எந்திரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். ஐசக் பாண்டியனுக்கு சீவலப்பேரி பகுதியில் சொந்தமாக வீடு இருக்கிறது. அந்த வீட்டின் மாடிப் பகுதியை வாடகைக்கு விடத் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஐசக் பாண்டியன் தனது வீட்டு வாசலில் வைத்திருக்கும் கண்டிஷன் போர்டு ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அந்த போர்டில், ‘குடிகாரர்கள், வடமாநிலத்தவர்கள் மற்றும் எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள் வீடு வாடகைக்குக் கேட்டு அணுக வேண்டாம்" என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து ஐசக் பாண்டியன் கூறும்போது, “குடிப்பழக்கம்தான் இளைஞர்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. மேலும், எடப்பாடி தனது ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்நாட்டு வேலைகளை வடமாநிலத்தவர்களுக்கு வாரிக்கொடுத்தார். வடமாநிலத்தவர்கள் தமிழர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கின்றனர். அதனால், மேற்கண்டவர்கள் யாருக்கும் வீடு கொடுக்கமாட்டேன்” என ஐசக் பாண்டியன் கடுகடுத்துப் பேசினார்.
மேலும், வீடு வாடகைக்குக் கேட்கும்போது நான்கு கால்களில் தவழ்ந்து வருகின்றனர் என்றும், பிறகு என்னையே நீங்கள் யார் என்று கேட்கிறார்கள் என்றும், அந்த அச்சம் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு வீடு இல்லை என்று கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போர்டு விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.