சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் நடைபெற்ற விசாரணையில், எண்ணூரில் எண்ணெய்க் கழிவு கலந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனப் பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியதோடு, தமிழ்நாடு அரசு இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘எண்ணூர் கடல் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுக்கு சிபிசிஎல் ஆலையே காரணம். சிபிசிஎல் ஆலையிலிருந்து ஏற்பட்ட கசிவே எண்ணெய்ப் படலம் உருவாகக் காரணம். மழைநீருடன் ஆலையின் எண்ணெய் கலந்ததால் கடலில் எண்ணெய் படலம் ஏற்பட்டது.
மேலும் தண்ணீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் சிபிசிஎல் ஆலையிலிருந்து கசிந்த எண்ணெய் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்து வந்ததால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்” என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.