Published on 10/10/2023 | Edited on 10/10/2023

கரூரில் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி இருந்த நிலையில், இன்று கரூர் மல்லம்பாளையம் பகுதியில் உள்ள மணல் குவாரியில் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மல்லம்பாளையம் மணல் குவாரி பகுதிக்கு சுமார் நான்கு கார்களில் மத்திய பாதுகாப்பு படைத்துறையினரின் பாதுகாப்புடன் வந்த அமலாக்கத்துறையினர், குவாரியில் அள்ளப்படும் மணல் அளவு குறித்து, பிரிவு ஆய்வில் ஈடுபட்டு சோதனை நடத்தினர். ஏற்கனவே தமிழகத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் மணல் குவாரி அதிபர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து கரூரிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. மணல் அள்ளும் அளவு குறித்து கணக்கிட தொழில்நுட்ப வல்லுநர்களும் வந்துள்ளனர்.