புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் தேவைக்காக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த பல வருடங்களாக ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான நீர்மூழ்கி மோட்டார்களில் பொருத்தியுள்ள மின் வயர்களை மர்ம நபர்கள் திருடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் திருடர்கள் பிடிபடவில்லை. அதனால் வயர்கள் திருடியவர்கள் இப்போது மின்மாற்றிகளையே திருடத் தொடங்கிவிட்டனர்.
கடந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில் மின் தட்டுப்பாட்டை குறைக்க ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த 15 சிறிய மின்மாற்றிகளை உடைத்து பல நூறு கிலோ காப்பர் காயில்களை திருடிச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக மின்வாரிய அதிகாரிகள் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் பலனில்லை. அதேபோல தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலும் மின்மாற்றிகளை உடைத்து காப்பர் காயில்களை திருடத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் மின் வயர்கள் அதிகம் திருட்டுப் போகும் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள வளவம்பட்டி கிராமத்தில் வயல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 16 கே.வி மின்மாற்றியை உடைத்து அதில் இருந்த ஆயில்களை எடுத்துவிட்டு 58 கிலோ காப்பர் காயில்களை எடுத்துக்கொண்டு மின்மாற்றியை உடைத்து தூக்கி வீசிச் சென்றுள்ளனர். மின்சாரத்தை துண்டித்து மின்மாற்றியை உடைத்து காயில்களை திருட பலர் வந்து சில மணி நேரம் ஆகும். ஆள் இல்லாத இடங்களில் உள்ள இதுபோன்ற மின்மாற்றிகளை உடைத்து திருடும் கும்பல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது ஷாக் கொடுத்துள்ளது.