Skip to main content

சீன லைட்டர்களைத் தடைசெய்ய வேண்டும் - முதல்வரிடம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

Published on 09/09/2022 | Edited on 09/09/2022

 

புுப

 

பயனாளிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் பணிகளை ஆய்வு செய்யும் பொருட்டு நெல்லை வந்த முதல்வர் ஸ்டாலின் நெல்லை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு விருதுநகர் செல்லும் வழியில் கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் இயங்கி வரும் தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். இயந்திரம் மூலம் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுவதை பார்வையிட்ட முதல்வரிடம், தீப்பெட்டி குச்சிகளை அடைக்கிற பணியிலிருந்த பெண்கள், வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. வாரத்திற்கு ஆறு நாட்கள் பணிவழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

 

இதனையடுத்து நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் அனைத்திந்திய சேம்பர் ஆஃப் மேட்ச் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாகத்தினரும் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தீப்பெட்டித் தயாரிப்பிற்குத் தேவையான பொட்டாசியம் குளோரேட்டை உற்பத்தி செய்கிற தொழிற் சாலையை இங்கு அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். அதற்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் வானம் பார்த்த பூமியான இந்த ஏரியாவில் விவசாயம் கிடையாது. எனவே இந்தப்பகுதியின் பல லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமே தீப்பெட்டித் தொழில்தான். அவர்களின் ஜீவாதாரம் பொருட்டும், தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்கிற வகையில் சீனத் தயாரிப்பான வைட்டர்களுக்கு ஒன்றிய அரசு மூலமாக நிரந்தரத்தடையைப் பெற்றுத் தரவேண்டும் என்ற அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் முதல்வர்.

 

தென்பகுதியில் தீப்பெட்டி உற்பத்தி வேலை வாய்ப்பின் முக்கிய அம்சம். அதனை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது. அதன் ஏற்றுமதி மூலம் 400 கோடி அந்நிய செலாவணி வருவாயும் ஈட்டப்படுகிறது. இதனிடையே தொழில் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில் நடைமுறைச் சிரமமான சீன லைட்டர்கள், சட்டப்படியும், சட்ட விரோதமாகவும் இறக்குமதி செய்யப்படுவதால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுகிற சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் வரவால் தீப்பெட்டி உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.10க்கு கிடைக்கும் இந்த சிகரெட் லைட்டர்கள் 20 தீப்பெட்டிக்குச் சமமாக இருப்பதால் தீப்பெட்டி உற்பத்திக்கும், வேலைவாய்ப்பிற்கும் கேள்வியாய் உள்ளது. மேலும் பிளாஸ்டிக் என்பதால் சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கும். எனவே அதன் இறக்குமதியைத் தடை செய்ய வேண்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் கவனத்திற்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்