ஜெ.வின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்சபட்ச குழப்பம் காரணமாக, அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து டி.டி.வி தினகரன் உருவாக்கியது தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற அ.ம.மு.க. சசிகலா, ஜெ.வுடனிருந்ததால் அவர் சார்ந்த தேவர் சமூகத்தினர் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியில் முக்கியமானார்கள். நேரம். சசிகலா சிறைவாசம் போக தினகரன் அ.ம.மு.க. ஆரம்பித்ததால் சமூகம் காரணமாக அவர் பக்கம் ஆதரவாகத் திரண்டனர் தேவர் சமூகத்தவர்கள். குறிப்பாக தினகரன் தென்மாவட்டம் வருகிறபோது அவர் சார்ந்த சமூகத்தினர் திரண்டு வந்து வரவேற்றது அ.ம.மு.க. விற்கு நல்லதொரு மாஸை ஏற்படுத்தியதற்கு மற்றதொரு காரணமும் பேசப்பட்டது.
அ.தி.மு.க.வின் எக்ஸ்.எம்.எல்.ஏ.க்களான ஆர்.பி.ஆதித்தன், அண்ணாமலை, இசக்கிசுப்பையா, மைக்கேல் ராயப்பன் இவர்களோடு அ.தி.மு.க.வின் பொறுப்பாளர்களான பாப்புலர் முத்தையா கல்லூர் வேலாயுதம் பாளை பகுதி செ.க்களான அசன் ஜாபர் அலி, எம்.சி.ராஜன் மற்றும் அ.தி.மு.க.வினர் பெரிய லெவலில் சாய்ந்தது தான். அது, அ.ம.மு.க.வின் பலம் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தியதால் முக்கிய கட்சிகளுக்கு சவாலாகவுமிருந்தது.
அ.ம.மு.க.வில் அமைப்பு ரீதியாக கிளைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக தென்மண்டல அமைப்பாளரானார் அ.தி.மு.க.வின் மாஜி முக்கிய புள்ளியான மாணிக்கராஜா. தேர்தல் நெருங்க பிற சமூகத்தின் ஆதரவாளர்களும் இணைந்தனர். இதனால் எம்.எல்.ஏ, எம்.பி. கனவு காரணமாக பலர் தங்களின் சொந்தப் பணத்தைக் கட்சி வளர்ச்சிக்காக காலி செய்தனர்.
நடந்து முடிந்த தேர்தலில் மக்களவைக்கு 37 தொகுதிக்கும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 வேட்பாளர்கள் என களத்தில் நின்றும் ஒருவர் கூடத் தேறவில்லை. பல இடங்களில் டெப்பாசிட்டும் பறிபோனது.
எதிர்பார்ப்புகள் நடக்காத சூழலில் தேர்தல் முடிவுக்குப் பின்பு அ.ம.மு.க.வின் முக்கியப் புள்ளிகளான அண்ணாமலை, ஆர்.பி.ஆதித்தன் போன்றவர்கள் அ.தி.மு.க.விற்கு நடையைக்கட்டியது பலரது கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து அதிருப்தி காரணமாக நேற்று முன்தினம் அ.ம.மு.க.வின் மா.செ. பாப்புலர் முத்தையா, நெல்லை வேட்பாளர் மைக்கேல் ராயப்பன், அசன் ஜாபர் அலி, எம்.சி.ராஜன் மற்றும் பல நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இது, கட்சி மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்த தி.மு.க பக்கமும் சாயும் முடிவிலுமிருக்கிறார்களாம்.
தினகரனை தொண்டர்கள், பொறுப்பாளர்கள் நெருங்கிவிடாதபடி தடையாய் நிற்கிறார் தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா. அது தான் எங்களின் விலகலுக்குக் காரணம் என்கிறார்கள் மாறியவர்கள். இதனிடையே அ.ம.மு.க.வின் முக்கியப் புள்ளியான இசக்கி சுப்பையா தன்னுடைய குற்றாலம் ரிசார்ட்டில் நேற்றும், முன்தினமும் தனது ஆதரவாளர்கள் முன்னூறு பேர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவது என்ற முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர் இதில் கலந்து கொண்ட சிலர்.
ஆனாலும் அ.ம.மு.க.வில் குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை.