திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக குடியாத்தம் பசுமாத்தூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 2 தேர்வு மூலமாக பணிக்கு வந்து ஓராண்டுக்கு முன்பு சேர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரகலாதன் என்பவர் கடந்த 31-01-2020 முதல் 8 நாட்களாக பணிக்கு வரவில்லை, அவர் இதுக்குறித்து அலுவலக அதிகாரிகளிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை, விடுமுறை விண்ணப்பமும் அளிக்கவில்லை. இதனால் சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள், அந்த இளைஞருடைய கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
அந்த எண் சுச் ஆப் என்ற நிலையிலேயே உள்ளதாம். இதனால் இதுப்பற்றி உயர் அதிகாரிகளுக்கு அலுவலகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆம்பூர் சார் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்ற பலரும் அரசுப்பணியில் சேர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து, சிபிசிஐடி விசாரணையில் அது உண்மையென தெரியவந்து தேர்வு எழுதியவர்கள், அதிகாரிகள், புரோக்கர்கள் என பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு ஊழியர் திடீரென வராமல் போனது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.