தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள வால்பாறையின் கண்ணன் குழி எஸ்டேட் பகுதியில் புகுந்த காட்டு யானை ஒன்று அப்பகுதி மக்களைப் பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் காட்டு யானை தாக்கியதில் 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் மேலும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிரப்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள கேரள மாநிலத்தில் கண்ணன் குழி எஸ்டேட்டில் சமீப காலமாகவே காட்டுயானை ஒன்று சுற்றிவருகிறது. இந்நிலையில் அப்பா மற்றும் தாத்தாவுடன் இருசக்கர வாகனத்தில் 5 சிறுமி சென்று கொண்டிருந்த பொழுது காட்டுயானை வருவதைக் கண்டு அலறியடித்து மூவரும் தப்பிக்க முயன்றனர். ஆனால் சிறுமி காட்டுயானையிடம் சிக்கிக்கொண்டார். காட்டுயானை மிதித்து அக்னிமியா என்ற அந்த ஐந்து வயதுச் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமியைக் காப்பாற்ற முயன்ற சிறுமியின் தந்தை மற்றும் அவரது தாத்தா ஆகியோர் படுகாயமுற்றனர். இவர்களின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் யானையை அந்த பகுதியிலிருந்து விரட்டி சிறுமியின் சடலத்தை மீட்டனர். சம்பந்தப்பட்ட காட்டுயானையை வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.