கோடையின் தாக்கம் நகரத்தை மட்டுமின்றி கிராமபுற மக்களையும் விட்டுவைக்கவில்லை என்பதுதான் தற்போதைய உண்மை, இந்தசூழலில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்களும், விவசாயிகளும் கடும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர்.
தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லை என்று அதிமுக அரசு அறிவித்து மார்தட்டிவருகிறது. அது பொய் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட நகரம், கிராமங்களில் திடிர்,திடீரென்று மின்வெட்டு ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது.
இது குறித்து திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்த விவசாயி அப்பாசாமி கூறுகையில், " மழைகாலம் வரை மின்தடையில்லை, தற்போது காலை,மதியம், இரவு என மூன்றுகட்டமாக அறிவிக்கப்படாத மின் நிறுத்தம் செய்கின்றனர். ஒரு தடவைக்கு 30 நிமிடத்தில் இருந்து ஒரு மணிநேரம் வரை நிறுத்துகின்றனர். எந்த ஆண்டும் இல்லாத நிலையில் மே மாதம் வருவதற்குள் கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்குள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொடுமைபடுத்திவருகிறது.
விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிதண்ணீருக்கே திண்டாட்டம் ஆகிவிட்டது. இந்தநிலமையில் மின்சாரம் மட்டுமே மக்களுக்கு வெயிலின் தாக்கத்தை போக்கி வருகிறது. அதோடு பள்ளிக்கூடங்கள் விடுமுறை என்பதால் குழந்தைகள் வீடுகளில் இருக்கின்றனர். இந்த நேரத்தில் திடீர் மின்தடை என்பது வெகுவாக பாதித்திருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் மின் தடை செய்கிறோம் என்று மின்சார வாரியம் திட்டவட்டமாக அறிவித்து விட்டால் அதற்கு ஏற்றார் போல் தண்ணீர் பிடித்துவைத்துக்கொள்வது, குளிப்பது, துணிதுவைப்பது என அனைத்திற்கும் மாற்று ஏற்பாடு செய்துகொள்ளவார்கள், ஆனால் எந்த நேரத்தில் மின்தடை ஏற்படுகிறது என்று தெரியாத நிலையே எங்களை வாட்டியெடுக்கிறது.இது சம்மந்தமா மின்சார வாரியத்தில் கேட்டால் சரியான பதிலை தறமறுக்கிறார்கள்."என்கிறார் ஆதங்கத்துடன்.