
கோப்புப்படம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் ஒன்றில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டில் ஏராளமான காய்கறி கடைகள், பழக்கடைகள் மற்றும் ஜவுளி வியாபாரம், வீட்டு உபயோக பொருட்கள், நகை கடைகள் என எண்ணற்ற கடைகள் இருக்கிறது. நேற்று நள்ளிரவு மார்க்கெட்டில் இருந்த ஒரு ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அத்தீயானது அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது. உடனடியாக அங்கு இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் பல்வேறு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயானது அணைக்கப்பட்டது. நீர் பற்றாகுறை காரணமாக குன்னூர் மட்டுமல்லாது கோத்தகிரி, உதகை ஆகிய பகுதிகளிலும் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயானது அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 6 நகைக்கடைகள், பேன்சி கடை, துணிக்கடை என மொத்தம் 16 கடைகள் எரிந்து சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.