தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 65க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த படுகொலையை கண்டித்தும், துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், மாணவர், இளைஞர், மாதர் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கி சூட்டை கண்டித்தும் தமிழக அரசு பதவி விலகக் கோரியும் அனைத்துக்கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை (மே 25) முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் ஒருபகுதியாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட தூப்பாக்கி சூட்டை கண்டித்தும், தமிழக அரசை பதவி விலகக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டக் குழு சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் சென்னை பாரிமுனையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் எல்சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், சி.திருவேட்டை, ஆர்.லோகநாதன், விஜயகுமார், ராணி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சண்முகம் கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி அறவழியில் கடந்த 100 நாட்களாக போராடிய அப்பாவி மக்கள் மீது, 100வது நாள் காவல் துறை கண்மூடித்தனமாக திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். 65க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த சம்பவத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
மாவட்ட ஆட்சியர் அங்கு தண்ணீர், மின்சார விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார். எனவே உடனடியாக அதை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை. நிறுவனம் வேண்டுமென்றால் நீதிமன்றம் செல்லட்டும். தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதை காரணம் காட்டி நிறுவனத்தை மூடாமல் காலம் கடத்துவது ஏற்புடையதல்ல.
மேலும் அங்கே தூப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட அனைத்து காவல் துறையினரையும் பணிநீக்கம் செய்து, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகியுள்ளதற்கு தமிழக முதல்வர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்ற அறிவிப்பு வரும் வரை மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும்.இவ்வாறு அவர் கூறினார்.