2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. தி.மு.க தலைமையும் தேர்தல் பணிகளை தொடங்கி, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்குப் பயிற்சி வழங்கிவருகிறது. அதேநேரத்தில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்துள்ளது. இதில், சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், டி.கே.எஸ்.இளங்கோவன் போன்றோர் உள்ளனர்.
இவர்கள், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்களைச் சந்தித்து தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியது என்னன்ன, தங்களது மாவட்டத்தில், தொகுதியில், நகரத்தில், கிராமத்தின் தேவையென்ன என்பது குறித்துக் கருத்துகளைக் கேட்டு வருகின்றனர்.
அதன்படி, அந்தக் குழு நவம்பர் 18ஆம் தேதி மாலை திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வருகை தந்தது. இந்தக் குழுவை திருவண்ணாமலை தெற்கு மா.செவும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு தலைமையிலான தி.மு.க நிர்வாகிகள் வரவேற்றனர். திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் சங்கங்கள், இளைஞர்கள் சங்கம், பொதுநல அமைப்புகள், வியாபார வர்த்தகப் பிரமுகர்கள் கலந்துகொண்டு தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய வாக்குறுதிகள் என்னன்ன என்பது குறித்த கடிதத்தை அக்குழுவிடம் தந்தனர்.
அதேபோல் ஒன்றிய, நகர, பேரூர் பகுதி நிர்வாகிகள் தங்கள் பகுதி முக்கியப் பிரமுகர்களிடம், தேர்தல் வாக்குறுதியாக என்ன வேண்டும் என விவாதித்து அது தொடர்பான அறிக்கையை வழங்கினர். இவைகளைப் பெற்றுக்கொண்ட இந்த குழு தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் இதை வழங்குகிறோம். இதில் பொதுமக்களுக்கு, சமூகத்துக்கு தேவையான வாக்குறுதிகளாக இருப்பவை தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். அதனை தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார், குழு உறுப்பினரும், தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா எம்.பி.
வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் வாக்குறுதி அறிக்கை, இரண்டாக வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகம் முழுமைக்குமான ஒன்று, அதில், நீட் தேர்வு ரத்து, விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண்மை சட்டங்கள் ரத்து, ராஜிவ்கொலை வழக்கில் 29 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை போன்றவை தமிழகம் முழுமைக்கானதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேவைகள் குறித்து மற்றொரு அறிக்கை என இரண்டாக வெளியிடவுள்ளதாக தி.மு.க தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 2016, சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகம் முழுமைக்குமான தேர்தல் வாக்குறுதி, மாவட்டங்கள் தோறும், தனித்தனி தேர்தல் வாக்குறுதி என இரண்டு தேர்தல் அறிக்கைகளை தி.மு.க வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.