Skip to main content

பொதுச்செயலாளர் தேர்தல்; போலீஸ் பாதுகாப்பு கேட்கும் எடப்பாடி தரப்பு

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

 Election of General Secretary; Edappadi side asking for police protection

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னர் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தன்னை நிலை நிறுத்தி உள்ளார். அதேநேரம் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தற்பொழுது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்பொழுது தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘அதிமுகவின் சட்டதிட்ட விதியின் அடிப்படையில் உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். வேட்புமனு மார்ச் 18 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. வேட்பு மனு பரிசீலனை 20 ஆம் தேதி.  வேட்பு மனுவை திரும்பப் பெற 21ம் தேதி கடைசி நாள். மார்ச் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு மறுநாள் 27 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனுவைப் பெற்றுக் கொள்ளலாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் நாளை முதல் தேர்தல் நடைபெற்று முடியும் 27 ஆம் தேதி வரை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என எடப்பாடி தரப்பைச் சேர்ந்த அதிமுக அமைப்புச் செயலாளர் ஆதி ராஜாராம் காவல்துறையில் மனு அளித்துள்ளார். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் கட்சிக்கு எதிரானவர்களால் அச்சுறுத்தல் உள்ளது. கட்சிக்கு எதிரானவர்கள், சமூக விரோதிகள், குண்டர்களால் அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்