Skip to main content

ஏகே 47 துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி! - துணை ராணுவ வீரர் கவலைக்கிடம்!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

ELECTION DUTY SALEM INCIDENT


தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவ வீரர்கள் சேலத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். கடந்த பிப். 28- ஆம் தேதி, ஒடிசாவில் இருந்து ஒரு ஆய்வாளர், 2 எஸ்ஐக்கள் உள்பட 92 வீரர்கள் சேலம் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகே உள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த வீரர்களில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தென்கனல் மாவட்டம் காமஷ்யா நகரைச் சேர்ந்த ஆசஷ்குமார் பூட்டியா (31) என்பவரும் உள்ளார். தேர்தல் பறக்கும் படையினருடன் வாகனச் சோதனையில் ஈடுபடுவதற்காக அவர்களுடன் துணை ராணுவ வீரர்களும் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், மார்ச் 23- ஆம் தேதி ஆசஷ்குமார் பூட்டியாவுக்கு தேர்தல் பறக்கும் படையினருடன் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. வேலைக்குச் சென்ற அவர், இரவு 09.00 மணிக்கு தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். 

 

பணிக்குச் செல்வதற்காக புதன்கிழமை (மார்ச் 24) அதிகாலை 04.30 மணியளவில் எழுந்த அவர், திடீரென்று அவர் வைத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தொண்டை பகுதியில் வைத்து துப்பாக்கி விசையை அழுத்தியதால் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய தோட்டா, வாய் வழியாக மூக்கை துளைத்துக்கொண்டு வெளியேறியது. 

 

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அவருடன் தூங்கிக் கொண்டிருந்த மற்ற காவலர்களும் அதிர்ச்சியுடன் எழுந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசஷ்குமார் பூட்டியாவை மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

விசாரணையில், ஆசஷ்குமார் பூட்டியா திருமணம் ஆகாதவர் என்பதும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. எனினும், எதற்காக அவர் அப்படியொரு முடிவுக்கு வந்தார் என்ற விவரம் தெரியவில்லை. பணிப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவருடைய செல்ஃபோனுக்கு கடைசியாக யார் யார் பேசினார்கள் என்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. 

 

இதற்கிடையே, தற்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஏகே 47 துப்பாக்கியை மீட்டு, அன்னதானப்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆசஷ்குமார் தற்கொலைக்கு முயன்றது குறித்து அவருடைய பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், சக வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்