தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06/04/2021) காலை 07.00 மணியளவில் தொடங்கிய நிலையில், அமைதியான முறையில் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இன்று இரவு 07.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், கடைசி ஒரு மணி நேரம் கரோனா நோயாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பிபிஇ (PPE) பாதுகாப்பு உடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவீதி அம்மன் கோயில் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த கரோனா நோயாளிகள் பிபிஇ பாதுகாப்பு உடையை அணிந்து வாக்களித்தனர். மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் கரோனா நோயாளிகள் வாக்களித்தனர்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் மே 2- ஆம் தேதி அன்று எண்ணப்படுகிறது.