எத்தனை முறைதான் தேர்தல் பணியாற்றினாலும் அரசு ஊழியர்களின் கவனக்குறைவால் சம்பந்தமே இல்லாமல் மூன்றாவது நபர்கள் பாதிக்கப்படும் அவலம் இப்போதைய ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது.
சேலம் மாவட்டம் சித்தனூர் அருகே உள்ள தளவாய்பட்டியைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் சிவராமன் (40). ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தளவாய்ப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு, ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் போட்டியிட்டார். அப்பகுதியில் பாரதி படிப்பு மையம் என்ற பெயரில் பல்வேறு சமூகப்பணிகளைச் செய்து வருவதால், உள்ளூரில் ஓரளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ள சிவராமன், எந்தப் பின்புலமும் இல்லாமல் சுயேச்சையாக தேர்தல் களத்தில் நின்றார்.
இந்நிலையில், இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் நேற்று (டிச. 30) நடந்தது. தளவாய்பட்டி கிராம ஊராட்சியில் 6600- க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். தளவாய்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 50ம் எண் (அனைத்து வகை வாக்காளர்கள்) வாக்குச்சாவடியின் முகப்பில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் ஆகிய விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒட்டப்பட்டு இருந்தது.
அந்தப் பட்டியலில், இரண்டாம் இடத்தில், 'சிவராமன்.சோ' என்பதற்குப் பதிலாக 'சிவகுமார்.சோ' என்று பிழையாக எழுதப்பட்டு இருந்தது. அதேநேரம் அந்தப் பெயருக்கு நேராக அவருக்கு ஒதுக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷா சின்னம் அச்சிடப்பட்டு இருந்தது. பெயர் தவறாக இருப்பதை, ஆரம்பத்தில் வேட்பாளரும் கவனிக்கவில்லை. அவருடைய உறவினர்கள் சிலர் வாக்களிக்கச் சென்றபோதுதான் சிவராமன் என்பதற்கு பதிலாக, தேர்தலிலேயே போட்டியிடாத நபரின் ஒருவரின் பெயர் எழுதப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து செல்போனில் காணொலி படமாக எடுத்து வேட்பாளருக்கு தெரியப்படுத்தினர். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சிவராமன், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மைய அலுவலர்களிடம் நேரில் சென்று முறையிட்டார். ஆனால் வாக்குச்சாவடி மைய அலுவலர்களோ, 'பெயர் தவறாக இருந்தாலும் அந்தப் பட்டியலில் சின்னம் சரியாகத்தானே இருக்கிறது?' என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தனர். அதற்கு சிவராமன், 'அப்படியெனில், இதுபோல் பெயர் பட்டியலே எழுதி ஒட்ட வேண்டிய அவசியமே இல்லையே? வெறும் சின்னங்களை மட்டும் அச்சிட்ட பட்டியலை ஒட்டலாமே?' என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்கள் சிலர், சிவராமன் முறையிடுவதை செல்போனில் பதிவு செய்ய முயன்றனர். பதிலுக்கு அவரும் செல்போனில் பதிவு செய்வேன் என்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் செல்போனில் படம் பிடிக்கக்கூடாது என்று சிவராமனை எச்சரித்தனர். உயரதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு கூறி அவரை வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியே அப்புறப்படுத்தினர். இதனால் அந்த மையத்தில் பத்து நிமிடங்களுக்கு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, தவறை உணர்ந்து கொண்ட வாக்குச்சாவடி அலுவலர்கள், பிழையாக எழுதப்பட்ட பெயரை அழித்துவிட்டு, வேட்பாளர் 'சிவராமன்.சோ' சரியாக எழுதப்பட்ட பட்டியலை வாக்குச்சாவடி முகப்பின் முன்பு ஒட்டினர்.
இதுகுறித்து சிவராமன் கூறுகையில், ''தளவாய்பட்டி 6வது வார்டில் 457 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க, தளவாய்ப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 50ம் எண் வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த மையத்தில் ஒட்டப்பட்டிருந்த பெயர் பட்டியலில் என் பெயர் பிழையாக எழுதப்பட்டு இருப்பதை கண்டறிந்து, வாக்குச்சாவடி அலுவலர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு முன்பே சுமார் 300 பேர் வாக்களித்து விட்டனர்.
தேர்தல் ஊழியர்களின் பிழையைச் சுட்டிக்காட்டினால், காவல்துறையினர் மூலம் மிரட்டி வெளியேற்றுகின்றனர். இந்த பட்டியலை வாக்குச்சாவடி மைய ஊழியர்கள் எழுதவில்லை என்றும், உயரதிகாரிகளிடம் இருந்து வந்து பெயர் பட்டியலைத்தான் ஒட்டினோம் என்றும் ஏதேதோ மழுப்பினார்கள். என் போன்ற சுயேச்சை வேட்பாளர்களின் வெற்றியைத் தடுக்கும் நோக்கத்துடன், ஆளுங்கட்சியினர் அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு இவ்வாறு குறுக்கு வழிகளில் ஈடுபடுகின்றனர்,'' என்றார்.