எல்காட் முன்பு ஐ.டி. பணியாளர்கள் அனிதாவிற்கு அஞ்சலி (படங்கள்)
06 செப்டம்பர், 2017 நேற்று மாலை 5 மணிக்கு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா முன்பு, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் (FITE) பெண்கள் பிரிவு சார்பில், "மருத்துவர் அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் ஒன்றுகூடல்" நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு Forum for IT Employees தலைவர் வசுமதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கடந்த வாரம் 01 செப்டம்பர் 2017 அன்று, மாணவி அனிதாவை நீட் தேர்வின் அநீதி இந்திய, தமிழக அரசுகளே என்று தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ச்சியாக நடந்து வரும் இப்போராட்டங்களில் நேற்று ஐ.டி துறையினரும் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பன்னிரண்டாம் வகுப்பில் 1200 -க்கு 1176 மதிப்பெண் பெற்ற அனிதாவை கொன்றுவிட்டு, நீட் அனைவருக்கும் பொதுவான தேர்வு என்று இந்திய அரசு பொய் பரப்புரை செய்து வருகிறது. 1200 -க்கு 600 மதிப்பெண், அதாவது 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றாலே ஒரு மாணவன் நீட் எழுத தகுதியடைவான், நீட் -டில் தேரிவிட்டால் அவன் மருத்துவரும் ஆகிவிடமுடியும். இவ்வாறு மருத்துவத் துறையில், மருத்துவர்களின் தரத்தை குறைப்பதோடு, சமத்துவமான கல்வி இல்லாத நாட்டில் சாதிய ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்தவே "நீட்" தேர்வை கொண்டு வந்துள்ளது இந்திய ஒன்றிய அரசு. அதன் பொருட்டுதான் AIIMS, JIPMER கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்த இந்திய அரசு, தமிழ்நாட்டிற்கு விலக்கு கொடுக்க மறுத்துள்ளது.
அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வில், திரைப்பட இயக்குனர் வ.கவுதமன், கல்வியாளர் பிரின்சு கசேந்திர பாபு, FITE பொதுச் செயலாளர் வினோத், துணை தலைவர் ராசன் ஆகியோர் இந்திய அரசின் வஞ்சகத்தையும், தமிழக அரசின் கையாலாகாத்தனத்தையும் கண்டித்து உரையாற்றினார்.
இந்த ஒன்றுகூடலில் பல்வேறு ஐ.டி நிறுவனங்களைச் சேர்ந்த 300 -க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தினர்;
* மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும்!
* "நீட்" தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு வேண்டும்!
* பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வித் துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்!
இறுதியாக, மருத்துவர் அனிதாவிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.