கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகேயுள்ள எய்தனூர் எனும் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மாம்பழம் சின்னம் வரையப்பட்டுள்ளது. அந்த வீடுகளில் அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியுள்ளனர்.
முதலில் ஆறுமுகம் என்பவரது வீட்டில் மர்ம நபர்கள் பேட்ரோல் குண்டு வீசியதில் அப்பகுதி தீப்பற்றி எரிந்தது. மேலும் அருகிலிருந்த சீதாராமன் என்பவரது வீட்டிலும் பெட்ரோல் வெடிகுண்டை வீசி உள்ளனர். ஆனால் அந்த குண்டு வெடிக்கவில்லை. அதனால் வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த காரை எரிக்க முயன்றுள்ளனர்.
அதேசமயம் பெட்ரோல் குண்டு வீசிய சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்க்கவே அந்த மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது. மாம்பழம் சின்னம் வரையப்பட்டுள்ள அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் பெட்ரோல் வெடிகுண்டு வீசியதால் இது தேர்தல் முன் விரோதமாக இருக்குமோ எனும் சந்தேகம் எழுந்துள்ளது. பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என்று நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அதேபோல் விருத்தாசலத்தில் மாற்று சமூகத்தை இழிவாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிறுத்தை சிவகுமார் என்பவரை விருத்தாசலம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் இதுபோன்ற சமூகப் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக நேற்று கடலூர் மாவட்டத்தில் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் குடிவெறியர்கள் மது கிடைக்காமல் அல்லாடினர்.
இதுபோன்ற சம்பவங்களால் கடலூர் மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.