நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடித்தாலும் ஆட்சி அமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை. இதற்கிடையே நேற்று மதியத்திற்கு பிறகு திடீர் திருப்பமாக மத சார்பற்ற ஜனதா தளத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் அறிவித்தது. இதனால் அரசியல் பரபரப்பு கர்நாடகா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பரவியது.
பாஜக தாங்கள் ஆட்சி அமைத்தே தீர்வோம் என அறிவித்ததோடு, அதற்கான வேலைகளிலும் இறங்கியது. நேற்று கர்நாடகா கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்த எடியூரப்பா தங்களுக்கு போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாகவும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறும் கூறினார்.
அதைத்தொடர்ந்து இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடகா பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டமன்ற கட்சித் தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து கவர்னரை சந்தித்த எடியூரப்பா.. தான் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை கொடுத்தார்.
கர்நாடகா கவர்னர் வஜூபாய் வாலா ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலும், குஜராத்தில் பாஜக அமைப்பிலும் இருந்தவர். இந்த பின்னனியில் கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு டெல்லியில் இருந்து வந்த உத்தரவுப்படி, எடியூரப்பாவை நாளை முதல்வராக பதவியேற்க வருமாறு அழைப்பு விடுக்க ஆயத்த பணிகளை செய்து வருகிறார்.
முதல்வராக பதவியேற்ற பின் குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிகபட்சம் இரண்டு வாரம் என சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆட்சி அமைத்த பிறகு பாஜகவினர் தாங்கள் விலைப் பேசப்படும் எம்.எல்.ஏக்களோடு பெரும்பான்மையை நிரூபிப்போம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.