தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சியினை நடத்தி வருகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை வருவாய் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற கண்காட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி மிரட்டுநிலை பள்ளி மாணவன் முகமதுஇஸ்மாயில் கார்பனின் மறுசுழற்சி என்ற தலைப்பில் படைப்புகளை தயார் செய்து காட்சிப்படுத்தி வைத்திருந்தார்.
அவரது படைப்பு புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்து மாநில போட்டிக்கு தேர்வானாது. பின்னர் கரூர் பரணி பார்க் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் 5 நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான கண்காட்சியில் 80 பேர் கலந்து கொண்டதில் மாணவன் முகம்மது இஸ்மாயிலின் படைப்பு 15 ஆவது இடத்தை பிடித்தது. பின்னர் மாநில அளவில் நடைபெற்ற கண்காட்சியில் சிறப்பிடம் பிடித்த மொத்தம் 50 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு தென்னிந்திய அளவில் செகந்திரபாத் சர்ஜோன் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்றன. இதில் மாணவன் முகம்மது இஸ்மாயில் 5 ஆவது இடம் பிடித்து சிறப்பிடம் பிடித்தார்.
மாணவன் முகம்மது இஸ்மாயிலுக்கு செகந்திராபாத்தில் உள்ள விக்னேஷ்வர் ஐயர் அருங்காட்சியத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் பதக்கம், புத்தகம் வழங்கிப் பாராட்டியிருந்தனர்.
எனவே தென்னிந்திய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பெருமை சேர்த்து தற்பொழுது பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் மாணவன் முகம்மதுஇஸ்மாயில் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் செல்லப்பன் ஆகியோரை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கிப் பாராட்டி வழி அனுப்பி வைத்தார்.
நிகழ்வின் போது அறந்தாங்கி கல்வி மாவட்ட மாவட்டக்கல்வி அலுவலர்( பொறுப்பு) கு.திராவிடச்செல்வம்,இலுப்பூர் கல்விமாவட்ட மாவட்டக்கல்வி அலுவலர் க.குணசேகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.