தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் முடிவுக்கு வரும் என்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
சேலத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்திருந்தார். நேரு கலையரங்கில் நடந்த இவ்விழாவில், நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது: அதிமுக தலைமையில் மக்களவை தேர்தலில் மெகா கூட்டணியை அமைத்து இருக்கிறோம். ஒவ்வொரு தேர்தலின்போதும் கூட்டணி என்பது மாறிக்கொண்டுதான் இருக்கிறது. கூட்டணி என்பது வேறு; கட்சிகளின் கொள்கை என்பது வேறு. தமிழகத்தில் அதிமுக அரசு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பாஜக, பாமக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்து தொகுதி பங்கீடும் முடிந்துள்ளன. மேலும், பல கட்சிகளுடன் பேசி வருகிறோம். டிடிவி தினகரன் அவருடைய கட்சியை இதுவரை பதிவு செய்தாரா? இல்லையா? என்று கூட தெரியவில்லை. அவர் 534 தொகுதிகளிலும் போட்டியிடட்டும்.
அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது பேச்சுவார்த்தைக்கு பின்னரே தெரியவரும். தேமுதிக உடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இந்த பேச்சுவார்த்தை முடிவு பெற்றுவிடும். தேமுதிக இணைந்தவுடன் எங்கள் கூட்டணி மெகா கூட்டணியாக அமையும். அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். வலுவான கூட்டணி அமைந்தால்தான் வளர்ச்சிப் பணிகள் செய்து தர முடியும்.
இந்திய அளவில் அதிமுக மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம். வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம். எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் இப்போது எதுவும் கூற முடியாது. மாயமான முகிலன் குறித்து அவருடைய குடும்பத்தினர் புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட நபருக்காக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டக்கூடாது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.