
கஜா புயலில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உட்பட பல மாவட்டங்களில் கோடிக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தது. மின்சாரம் இல்லை தண்ணீர் இல்லை மொத்த விவசாயமும் காணாமல் போய் இருந்த நேரம். விவசாயிகள், பொதுமக்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் இழந்து நின்ற நேரத்தில் அரசு, தனியார் உதவிகளை எதிர்நோக்கி இருந்தனர். அப்போது வங்கிகள், சுய உதவிக்குழு கடன், இன்ன பிற கடன்களை கட்ட நெருக்கடி கொடுத்தது.
அப்போது தான், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் கிராமத்தில் டீ கடைக்காரர் சிவக்குமார், ‘எனது கடையில் டீ குடித்து கடன் வைத்துள்ள வாடிக்கையாளர்களான விவசாயிகள் கஜா புயலின் கோரபிடியில் சிக்கி தவிப்பதால் எனது கடைக்கு தரவேண்டிய கடன் தொகையை ரத்து செய்கிறேன்’ என்று போஸ்டர் எழுதி ஒட்டி சுமார் ரூ.30 ஆயிரம் ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தார். அதன் பிறகு இவரைக் காரணம் காட்டியே அரசியல் தலைவர்கள் மேடைகளில் பேசினர்.
அதன் பிறகு கடந்த கொரோனா காலத்தில் கிராமங்களில் உணவுக்காக தவித்த ஏழ்மை நிலையில் உள்ள பொதுமக்களுக்காக இருப்பவர்களிடம் வாங்கி இல்லாதவர்களுக்கு அரசி, பால் உணவுப் பொருட்களை வழங்கி வந்தார். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்த போது நிதி திரட்டி வழங்கினார்.
தற்போது புதுக்கோட்டை கேப்பரை பகுதியில் பகவான் என்ற பெயரில் தேநீர் கடை நடத்திவரும் சிவக்குமார், கடந்த வாரம் நலிவுற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ டீ அருந்தி மொய் செய்யுங்கள் என்று தேநீர் மொய் விருந்து நடத்தினார். ஒரு நாள் முழுவதும் தேநீர் குடித்தவர்கள் தங்களால் இயன்ற தொகையை மொய் சட்டியில் போட்டுச் சென்றனர். பலர் இணையவழியிலும் பணம் அனுப்பினர். மாலையில் ரூ.62 ஆயிரம் மொய் வசூலாகி இருந்தது. அந்தப் பணத்தில் 12 வெள்ளாடுகள் வாங்கிய சிவக்குமார் அதே பகுதியில் ஆதரவற்ற, மிகவும் பின்தங்கிய நலிவுற்ற குடும்பங்களை தேர்வு செய்து 11 பெண்களை அழைத்து 10 பெண்களுக்கு தலா ஒரு ஆடும், ஒரு பெண்ணுக்கு மட்டும் 2 ஆடுகளும் வழங்கினார்.
அப்போது அவர், “இது வெள்ளாடு ஆத்தா ஒரே நேரத்துல 2, 3 குட்டி போடும். அடுத்த வருசம் நிறைய குட்டிகளோட உன் குடும்பம் நல்லா வரனும்” என்று சொல்லி ஆடுகளை பெண்களிடம் கொடுத்தார். “நீ நல்லா இருக்கனும் தம்பி” என்று சிவக்குமாரை வாழ்த்திவிட்டு சென்றனர்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிலர், ‘போன மாசம் ஒருத்தர் கட்சிக்கொடி பறக்க காவித்துண்டோட வேன்லயே வந்தாரு. கூட்ட நெரிசல் கூட ஏற்பட்டுச்சு. தன் கட்சிக்காரர் கொடுத்த செம்மறிகிடா குட்டிய வாங்கி ஒரு அம்மாட்ட குடுத்து நிறைக குட்டி போடும்னுட்டு போனாரு. ஆனா நம்ம சிவக்குமாரு பரவாயில்ல சொந்த செலவுல மொய் விருந்து நடத்தி பல பேர்கிட்ட வசூல் பண்ணி 10 குடும்பம் வாழ ஆடு வாங்கி குடுத்துட்டார்’ என்று பேசிக் கொண்டனர்.