Skip to main content

'வெட்கி தலைகுனிய வேண்டும்' - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Edappadi Palaniswami condemns 'should bow down in shame'

காஞ்சிபுரத்தில் சீருடையிலிருந்த பெண் காவலரை, அவரின் கணவர் கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம். அங்கு பணியாற்றி வரும் பெண் காவலரான டெல்லி ராணி வழக்கமாக இன்று பணியை முடித்துவிட்டு உணவு அருந்துவதற்காக வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள இந்தியன் வங்கி அருகே அவருடைய கணவர்  வழிமறித்து டில்லி ராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டில்லி ராணியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் அலறியடித்த டெல்லி ராணி இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து கதவை தாழிட்டுக் கொண்டு தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் பெண் காவலர் டெல்லி ராணியை மீட்டு ஆட்டோ மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சீருடையிலிருந்த பெண் காவலர் கணவராலே கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே குடும்ப பிரச்சனை இருந்த நிலையில் கணவன் மனைவியைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edappadi Palaniswami condemns 'should bow down in shame'

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் டில்லி ராணி என்பவர் பட்டப்பகலில் சீருடையில் இருந்தபோதே அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தனிப்பட்ட விரோதத்தால் கணவரே வெட்டியுள்ளதாக செய்திகள் வந்தாலும், உண்மைக் காரணம் என்னவென்பதை காவல்துறை தீர விசாரித்து தொடர்புள்ளோரை உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காரணம் எதுவாக இருப்பினும், சீருடையில் உள்ள ஒரு காவலரே பட்டப்பகலில் அரிவாளால் தாக்கப்படுவது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் புதிய உச்சம். இதற்கு காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகச் சொல்லும் முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்! தான் சிறப்பாக சட்டம் ஒழுங்கை காத்து வருவதாக கூறி வரும் திமுக அரசின் முதல்வர், இனியாவது அந்த மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக்காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்