சேலம் – சென்னை பசுமை வழிச்சாலைக்கு நிலத்தை தியாகம் செய்கின்ற விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்று வலியுறுத்துகிறார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன். இது குறித்த அவரது அறிக்கையில்,
’’சேலம் – சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவை என்பதை மறுக்க முடியாது. அதே சமயத்தில் அந்த திட்டத்திற்காக நிலத்தை தியாகம் செய்கின்ற விவசாயிகளுடைய பாதிப்பையும் மறுத்துவிட முடியாது. பாதிக்கப்படுகின்ற விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகள் சரியாக வழங்கப்பட வேண்டும். அதை இரண்டு வகையாக பிரிக்கப்பட வேண்டும். 1 ஏக்கர், 2 ஏக்கர் இருக்கின்ற மிக சிறிய ஏழை விவசாயிகள் முழு நிலத்தையும் சாலைக்காக இழப்பவர்கள். இரண்டாவது 5 ஏக்கருக்கு மேல் இருக்கின்ற விவசாயிகள் சாலைக்காக பாதி நிலத்தை இழந்து மீதி பாதியை சாலை ஓரத்தில் கிடைக்க பெறுபவர்கள். முழு நிலத்தையும் இழக்கின்ற விவசாயிகள் வாழ வழி தெரியாமல் தவிப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டியது தமிழக அரசினுடைய கடமை. நிலத்தை இழக்கின்ற விவசாயிகள் செய்கின்ற தியாகத்தின் மூலமாக அந்த பகுதியில் இருக்கின்ற அனைத்து நிலங்களும் மிக அதிகமாக விலை உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த நிலையில் உண்மையான தியாகிகளை திக்கு தெரியாமல் அலையவிடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை. சாலை அமைந்த பின்னால் அந்த பகுதியில் இருக்கின்ற நிலங்களின் மதிப்பு எந்த அளவுக்கு உயருமோ அந்த அளவிற்கு இழப்பீடு வழங்குவதுதான் நியாயமானதாக இருக்கும்.
நிலத்தினுடைய வழிகாட்டி மதிப்பும், சந்தை மதிப்பும் வேறுவேறு என்பது எல்லோருக்கும் தெரியும். அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் தெரியாதது அல்ல. அதை புரிந்து கொண்டு அந்தந்தப் பகுதியில் இருக்கின்ற சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு 3 மடங்கு சந்தை மதிப்பை கொடுப்பது குறைந்தப்பட்ச இழப்பீடாகும். தன்னுடைய நிலத்தில் பாதிக்குமேல் இழக்கின்ற அனைத்து விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். சாலை அமைத்த பின்னால் எதிர்காலத்தில் வசூலிக்கப்படுகின்ற சுங்கக்கட்டணத்தில் ஒரு சிறு பகுதியை குறிப்பிட்ட கால அளவிற்கு நிலங்களை இழக்கின்ற விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கவும் அரசு முன்வர வேண்டும். இப்படிப்பட்ட மிகவும் தேவையான இழப்பீடுகள் நிலத்தை இழக்கின்ற ஏழை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலமாக அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். தமிழக அரசும், அமைச்சர்களும் நினைத்தால் சட்டம் இதற்கு வழிவிடும்.
எதிர்ப்புகள் குறையவும் வாய்ப்பிருக்கிறது. பாதிக்கப்படுகின்ற விவசாயிகளின் அடிப்படை தேவைகள் இவையென்று உணர்ந்து இதை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். பாதிக்கப்படுகின்ற விவசாயிகளிடத்தில் பேசி புரிய வைக்கப்பட வேண்டுமே தவிர கைது நடவடிக்கையை கைவிட வேண்டும்.’’என்று தெரிவித்துள்ளார்.