கடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் 100 நாள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் - 3 தமிழ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் 21.08.2019 புதன்கிழமை ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், பிக்பாஸ் நடிகை மதுமிதா மீது கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், "விஜய் டிவியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் -3 தமிழ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட. நடிகை மதுமிதா தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே 11,50,000 பெற்றுள்ளார். மீதமுள்ள (ஒரு நாள் 80,000 ரூபாய் வீதம்) 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியதாகவும், அதை ஒப்புக் கொண்டு சென்றவர் 19.08.19 ம் தேதி 15.30 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து விடுவேன் என்றும், நீங்கள் தரும் வரை காத்திருக்க முடியாது என்று மிரட்டி உள்ளார்" என்று புகாரில் கூறியுள்ளார்.
20.08.2019ஆம் தேதி 19.00 மணிக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.