திருவண்ணாமலை மாவட்டத்துக்கு செப்டம்பர் 9ம் தேதி காலை 9.30 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி வருகை தருகிறார். நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் கரோனா நோய் தொடர்பாகவும், திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வு செய்கிறார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபின், தொழில்துறையினர், மகளிர் சுயஉதவிக்குழுவினர், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்து உரையாடுகிறார். அதன்பின்னர் திருவண்ணாமலை – செங்கம் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்திக்கிறார்.
முதல்வர் வருவதால் அ.தி.மு.கவினர் நகர் முழுக்க பேனர்களாக வைத்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா டெஸ்ட் எடுத்தவர்களை மட்டும்மே மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திலும், சுற்றுலா மாளிகையிலும், முதல்வரை சந்திக்க, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படும் என காவல்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிகள் முடிந்தபின், மதிய உணவுக்குபின் சுற்றுலா மாளிகையில் இருந்து கிளம்பி காரிலேயே கிரிவலம் வருகிறார் முதல்வர் என்கிறது அதிகாரபூர்வ தகவல்கள். கிரிவலம் முடித்துக்கொண்டு செப்டம்பர் 9ம் தேதி மாலை விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வு பணிக்காக செல்கிறார்.
கரோனா பரவலை முன்னிட்டு கடந்த 6 மாதமாக பௌர்ணமி கிரிவலம் உட்பட சாதாரண நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.