திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திங்கள் கிழமை வாக்குகள் சேகரித்தார். காலை கந்தர்வகோட்டையில் வாக்கு சேகரிக்க சென்ற போது ஒரத்தநாடு சம்பவம் போல வேறு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக எடப்பாடி கான்வாய் வந்தவுடன் 10 அடி நீரத்திற்கு தடுப்புகளை வைத்து மக்கள் செல்லவிடாமல் தடுத்தனர்.
அப்போது ஒரு வயதான அதிமுக தொண்டர் முதலமைச்சரை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று முன்னால் செல்ல முயன்ற போது எடப்பாடி அருகில் நின்ற அமைச்சர் சைகை காட்டியதால் ர.ரக்கள் அந்த முதியவரை தாக்கி இழுத்துச் சென்றனர். அதேபோல மற்றொரு தொண்டர் எங்களுக்கு எதுவும் வேண்டாம் காவிரி குண்டாறு இணைப்பை செயல்படுத்துங்கள் என்று கும்பிட அவரையும் வெளியேற்றினார்கள்.
மீண்டும் மாலையில் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரித்தார். இதற்காக புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வாகனங்களில் ஆட்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். நான் ஆள் இல்லாத இடத்தில் பேசுவதாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசிவருகிறார். நீங்கள் கொடுக்கும் கரவொலி ஸ்டாலின் காதுகளை கிழிக்க வேண்டும் என அடித் தொண்டையில் இருந்து சத்தமாகப் பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
பதவியைப் பெறுவதற்காக சசிகலாவிடம் மண்புழு போல ஊர்ந்து சசிகலாவின் காலில் விழுந்ததாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினின் விமர்சனம் செய்தமைக்கு பதில் கொடுப்பதாக.. மண்புழு விவசாயிகளின் நண்பன். அது விவசாயத்திற்கு உரமாகப் பயன்படுகிறது. நான் ஒரு விவசாயி என்பதால் மண்புழு என்பது ஸ்டாலினுக்குப் புரியாது என்றார்.
கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மக்கள் இரண்டு மாதம் வரை மின்சாரம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். மூன்றே நாளில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டதாக அவர் கூறியதை அங்கு கூடியிருந்தவர்களை எரிச்சலடையவே செய்தது.
திருச்சி தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டையில் பிரச்சாரம் செய்த எடப்பாடி கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பித்துரையை அருகில் வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தார். இவர்களுக்குப் பின்னால் திருச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் பரிதாபமாக நின்றுகொண்டு இருந்தார். வாக்கு கேட்கும் போதும் இரட்டை இலையை முதன்மைப் படுத்தியே பேசினார். இதனால், நின்ற வாக்காளர்கள் தாங்கள் எந்தச் சின்னத்தில் வாக்களிப்பது என்ற குழப்பத்துடனே சென்றனர். முதல்வரின் இத்தகைய பிரச்சாரம் தேமுதிகவிரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.