கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தாக்குதல் இல்லாமல் இருப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், தேவையற்ற பொருட்கள், குப்பைகளை சுற்றுப்புறங்களில் தூக்கி எரிவதை தவிர்த்து அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் கொட்ட வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பண்ருட்டி நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார். தூய்மை இந்தியா திட்டம், கொசு ஒழிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடமும், ஊழியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் துரிதமாக செயல்பட்டு நகராட்சி முழுவதும் ஒரு வீடுகள் கூட விடுபடாமல் ஆய்வு செய்து டெங்கு கொசு புழுக்கள் உருவாக கூடிய இடங்களை கண்டறிந்து முற்றிலுமாக அழித்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பின்னர் திருவதிகை பகுதிக்கு சென்ற அன்புசெல்வன், அங்கிருந்த ஒர்க்க்ஷாப், பழைய இரும்பு கடைகளில் தேங்கி இருந்த தண்ணீரை பரிசோதனை செய்தார். அந்த தண்ணீரில் டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து ஒர்க்ஷாப் உரிமையாளர் சக்திவேல் என்பவருக்கு ரூ.25 ஆயிரமும், மற்றொரு பழைய இரும்பு கடை உரிமையாளருக்கு ரூ.5000 ஆயிரமும் அபராதத்தையும் விதித்தார். அதோடு சக்திவேல் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.