எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு வழக்கில் 'கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்வதோடு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும்' என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்புகள் மேற்கொண்டு வருகிறது. அதிமுக பொதுக்குழுவிற்கு பிறகு இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல இருக்கிறார். இதற்கான வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு அதிமுகவின் எடப்பாடி தரப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். தற்பொழுது அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி இன்னும் சற்று நேரத்தில் அதிமுக தலைமையகம் வரவிருக்கும் நிலையில் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி தமிழக டிஜிபியிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும், சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருவதாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அங்கு அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.