ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியில் வாக்குக்கள் எண்ணி முடித்த பின்னரும் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருக்கின்றன என்றும், முடிவுகளை அறிவிக்கக்கோரி திமுகவனர் எடப்பாடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி திமுக கூட்டணி முந்திக் கொண்டிருப்பதாகவும், திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காக அதிமுக, போலீஸ் மற்றும் அதிகாரிகள் சதி செய்வதாகவும், அதனால்தான் எடப்பாடியில் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருப்பதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து புகார் மனு அளித்தார்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
திமுகவின் குற்றச்சாட்டும், அதையடுத்து நடக்கும் முதல்வரின் இந்த அவசர ஆலோசனையும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.