
ஒரு கிராமத்தின் கட்டமைப்பு, நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும், ஏழை கிராம மக்கள் எளிமையாக பயனடைவது என்பது குறித்து கிராமத்தின் புள்ளிவிவரத்தை ஆய்வுசெய்து அதை மத்திய - மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தக் கோரி குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், தலைமைச் செயலாளர் என அதிகாரம் படைத்த அனைவருக்கும் அனுப்பிவிட்டு காத்திருந்த மாணவியின் குரல் அரசுகளை எட்டவில்லை. அதனால் நீதிமன்றத்தையும் நாடியுள்ளார் அந்த அரசுப் பள்ளி மாணவி கவுரி.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா உள்ளடங்கிய கலியரான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரது மகள் கவுரி பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்துவருகிறார். மாணவி கவுரி, தான் 8ஆம் வகுப்பு படிக்கும்போது தயாரித்த ஆய்வறிக்கையைப் பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார். இந்தச் செய்தியைக் கடந்த வெள்ளிக்கிழமை "அரசுகளுக்கே ஆலோசனை சொல்லும் அரசுப் பள்ளி மாணவி" என்ற தலைப்பில் மாணவியின் முதல் பேட்டியை நக்கீரன் இணையத்தில் விரிவான முழு வீடியோவாக வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில்தான், திங்கள்கிழமை காலை மாணவியை தொலைபேசியில் தொடர்புகொண்ட மாவட்ட ஆட்சியரக அலுவலர், “தங்கள் ஆய்வறிக்கையை தலைமைச் செயலகத்தில் கேட்கிறார்கள். எங்கள் அதிகாரி வருவார் கொடுத்தனுப்புங்கள்” என்று கூறியுள்ளார். அதன்படி கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர் கலியரான்விடுதிக்குச் சென்று மாணவியின் ஆய்வறிக்கை புத்தகத்தை வாங்கியுள்ளார். அப்போது, “சில நாட்களுக்கு முன்பு கூட ஆட்சியர் அலுவலகத்தில் இதுபற்றி பேச வந்த எங்க அப்பாவிடம் வேறு அலுவகம் போகச் சொன்னாங்களாமே. இப்ப தேடி வந்து வாங்குறீங்களே” என்று மாணவி கவுரி புத்தகம் வாங்க வந்த அதிகாரியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், “மேல் அதிகாரிகள் சொன்னாங்க, வாங்க வந்தேன்” என்று சொல்லி புறப்பட்டுள்ளார். 3 வருடங்களாக அரசு அலுவலகங்களின் கதவுகளைத் தட்டிய ஆய்வுப் புத்தகம், நக்கீரன் செய்தியால் அதிகாரிகளே தேடிவந்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு உயர்ந்துள்ளது. மாணவியின் ‘கிராம ஆட்சியர் திட்டம்’ பற்றி அதிகாரிகள் ஆய்வுசெய்து நடைமுறைப்படுத்தட்டும்.