புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு எம்.ஆர் கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-24-ம் ஆண்டு கரும்பு அரவை பணியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அரவை பணி மற்றும் ஆலையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட நவீன மயமாக்கப்பட்ட ஆய்வுக்கூடம், ஹைட்ராலிக் டிப்பர் இயந்திரம், தானியங்கி எடை, கரும்பு தளத்தில் தார் சாலை அமைத்தல், எத்தனால் உற்பத்தி ஆலைத் திட்டம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகையை வழங்கி பேசுகையில், கரும்பு அரவை 98.67 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 160.54 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு பிறகு 2022-23 அரவை பருவத்தில் 9.27% என்ற அதிகபட்ச சர்க்கரை கட்டுமானம் பெறப்பட்டது. கரும்பு விலை டன்னுக்கு ரூ 2750 இல் இருந்து ரூ3016 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகை ஆக ரூ 651 கோடி வழங்கப்பட்டுள்ளது. கரும்பு உற்பத்தியை அதிகரிப்பதற்காக ரூ14.80 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆலைக்கு உட்பட்ட பகுதிகளில் விளையும் கரும்புகளை இடைத்தரகர் மூலம் தனியார் அல்லது மற்ற ஆலைகளுக்கு எடுத்துச் செல்ல முயன்றால், சம்பந்தப்பட்ட கரும்பை வாங்கும் ஆலைக்கும் இடைத்தரகர்கள் மீதும் கடுமையான குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 2018 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவையில் இருந்து வந்த நிலையில் 35 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் நிர்வாக சீர்திருத்தம் இல்லாததால் ஆலை நட்டத்தில் இயங்கியது. இதனை திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு முதல்வரின் ஆலோசனையின் பேரில் லாபகரமாக இயக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகை கடனாக ரூ600.37 கோடி வழங்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி 1 மற்றும் எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தி ஆலை, தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தி திட்டம் துவங்கப்பட்டது” என்றார்.
இந்நிகழ்ச்சியில், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன், சர்க்கரை துறை ஆணையர், முதன்மை செயலாளர் விஜயராஜ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் சர்க்கரை ஆலையின் செயலாட்சியர் சதீஷ், சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.