தி.மு.க.வில் கருத்து வேறுபாடு காரணமாக அதிருப்தியில் இருந்து வந்த சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக நேற்று காலை முதலே தகவல் வெளியாகி வந்தது.
அதை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முன்னணியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதற்கிடையே டெல்லியில் ஜே.பி நட்டா வீட்டில் கு.க. செல்வம் தன்னை இணைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே அவரை சந்தித்துப் பேசிய பிறகு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய க.க.செல்வம், நான் பா.ஜ.க.வில் இணையவில்லை என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் ஸ்டாலின் தி.மு.க.வில் உள்கட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றும், முருகக் கடவுள் குறித்துத் தவறாகப் பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய தி.மு.க. மூத்த தலைவர் துரைமுருகன், கு.க செல்வம் குறித்து பேச ஒன்றும் இல்லை; அவரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை என்று தெரிவித்துள்ளார்.