சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சியை சிதம்பரம் நகராட்சியுடன் இணைப்பதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்.5-ம் தேதி சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தை அறிவித்துள்ளவர்களுடன் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் சார் ஆட்சியர் பொறுப்பு சந்திரகுமார் (கடலூர் மாவட்ட கலால் உதவி ஆணையர்) தலைமை தாங்கினார். சிதம்பரம் வட்டாட்சியர் (பொறுப்பு) பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எம்.எஸ் ஜாகிர்உசேன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் தமிம்முன்சாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தன், மணலூர் அறிவழகன், மேட்டுக்குப்பம் இளவழகன், மணலூர் ராஜா, தனசேகர், மலர்விழி, காதர் உசேன், லால்புரம் சாய்பிரசாத், சிதம்பரம் தாலுகா காவல் ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்மஜீத், வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன் உள்ளிட்ட பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இதுகுறித்த தகவலை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிப்பது என்றும் சரியான முடிவை அறிவிக்க 15 நாள் அவகாசம் கேட்டுள்ளனர். இதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். சரியான முடிவு இல்லை என்றால் லால்புரம் ஊராட்சியில் உள்ள அனைத்து பொது மக்களையும் ஒருங்கிணைத்து லால்புரம் பிரதான சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கத் தலைவர் ஜாகீர்உசேன் அறிவித்துள்ளார்.